June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா

1 min read

India intercepts and destroys Pakistani missile

8.5.2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தன. இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது.

பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

பூஞ்ச் பஸ் நிலையத்திலும் குண்டுகள் விழுந்தன. இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. எண்ணற்ற வீடுகளும் இடிந்து விழுந்தன. நேற்று மதியம்வரை, தாக்குதல் கடுமையாக இருந்தது. அதன்பிறகு விட்டுவிட்டு தாக்குதல் நடந்தது. அதிலும், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டுமே தாக்குதல் நீடித்தது.

தொடர்ந்து குண்டுகள் வந்து விழுந்ததால், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் தரப்பில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பஞ்சாப்பின் அமிர்தசரசில் செயலிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *