ராஜராஜசோழன் சதய விழா- வரலாற்றை கண்முன் நிறுத்திய ஊர்வலம்
1 min read
Sadhaya Vizha of the Rajaraja Chola – A procession that brought a historic era to life before one’s eyes
21.10.2026
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத 1000 ஆண்டுகளுக்கு முன்பே நவீன தொழில்நுட்பத்துடன் உலக கட்டிடக்கலைக்கே சவால் அளிக்கக்கூடிய வகையில் பிரமாண்டமாகவும், தொழில்நுட்ப நேர்த்தியாகவும் பெரிய கோவிலை மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டி பெருமை சேர்த்தார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 1041-வது சதய விழா அரசு விழாவாக இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் சதயவிழா ஊர்வலம் நடைபெற்றது.
கலை பண்பாட்டு துறையின் தஞ்சை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை விஜய் சரவணன் எம்.எல்.ஏ., மேயர் (பொ). டாக்டர் அஞ்சுகம் பூபதி, சதய விழாக்குழு தலைவர் சரவணன், துணை தலைவர் சங்கர்ராமன், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ராஜாராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டிமேளம், தவில், கரகாட்டம், மயிலாட்டம், தேவலோக நடனங்களான சிவன்- பார்வதி, காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களிலும், வள்ளி திருமண வேடத்திலும் கலைஞர்கள் பங்கேற்றனர்.
மேலும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில் மாமன்னர் ராஜராஜன் வேடம் அணிந்த கலைஞர் குதிரை பூட்டப்பட்ட ரதத்தில் வர முன்னாள் பாதுகாவலர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த காட்சி ராஜராஜ சோழனின் வரலாற்று நகர்வலத்தை அனைவரின் கண்முன்னே நிறுத்தியது. இந்த சதய விழா ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக பெரிய கோவிலை வந்தடைந்தது.
இதையடுத்து பெரிய கோவில் வளாகத்தில் சதய விழா தொடக்க நிகழ்ச்சிகள் இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது. முன்னதாக சதய விழாக்குழு தலைவர் சரவணன் வரவேற்றார். விழாவிற்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விஜய் சரவணன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு துணை தலைவர் சங்கர்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் நல்ல சிவம் மற்றும் குழுவினரின் திருமுறை இன்னிசை நடைபெற்றது. பின்னர், மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிற்பகலில் பரதநாட்டியம், நாட்டுப்புற நிகழ்ச்சி, நடனம், இசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர், மாலை 6 மணிக்கு 1041 நடன கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலையில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.