திப்பணம்பட்டி அரசு பள்ளிக்கு அறநிலையத்துறை இடம் வழங்க கோரிக்கை
1 min read
Request to provide land to the Thippanampatti Government School from the Charities Department
8.5.2025
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட அருகில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை வழங்க வேண்டும் என்று முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபுவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் இயங்கி வருகிற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடவசதி இல்லை பள்ளி மாணவ மாணவியர்கள் மரத்தடியிலும் ஆய்வக அலுவலகத்திலும் வராண்டாவிலும் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு
திப்பணம்பட்டியில் பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் 4.5 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் குத்தகை நீண்ட நாள் செலுத்தப்படாமல் இருக்கிற நிலத்தை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நீண்ட நாள் குத்தகையின் பேரில் வழங்க வேண்டும்.
அந்த மனு தற்போது விசாரிக்கப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உகந்த இடம் குத்தகைதாரர்கள் யாரும் இல்லை தனிநபர் பயன்பாட்டிலும் இல்லை கோவில் நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே வழங்கலாம் என்று அரசுக்கும் அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.