திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்
1 min read
The bride who sent her husband to the war front on the day after her marriage
- 5.2025
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் (வயது 27) காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். அவர் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தானுடன் போர் வெடித்ததால் இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, அவர்களை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று திருமணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பிவிட்டார் ராணுவ வீரரான தியாகி யாதவ். அவரது பெற்றோர்களும் தாய்நாட்டுக்கு சேவை செய்வதுதான் முக்கியம் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இவர் திருமணம் செய்த பெண் பிரியா யாதவும் தன் கணவர் தியாகி யாதவை பெருமிதத்துடன் போருக்கு அனுப்பி வைத்தார். இந்த நெகிழ்வான சம்பவம் வட மாநிலங்களின் சமூக வலைதளங்களில் செய்தியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணப்பெண்ணான பிரியா யாதவ் கூறுகையில்,
எனது கணவர் தியாகி யாதவ் தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் அதிகம் கொண்டவர். நாடுதான் அவருக்கு முதல் மனைவி, அதனால்தான் அவர் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் திருமணமான மறுநாளே போர் முனைக்கு சென்றுவிட்டார். திருமணமான ஒரு புதுபெண்ணின் உணர்வுகளையும் அவளுடைய இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நல்ல உள்ளம் கொண்டவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நான் எதைப்பற்றியும் சிந்திக்காமல் என் கணவர் தன் கடமையை செய்வதற்காக பெருமையுடன் வழியனுப்பி வைத்தேன் என தெரிவித்துள்ளார்.
தியாகி யாதவை அவரது திருமணத்துக்கு கூடியவர்களை விட அதிக எண்ணிக்கையில் நந்தன் கிராமத்தின் சுற்றூ வட்டாரத்தினரும் இணைந்து வழியனுப்பி வைத்துள்ளனர். தியாகி யாதவின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக நாட்டுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.