June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய விமானத்தின் அவசரகால பயன்பாட்டுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

1 min read

Pakistan denies permission for emergency use of Indian plane

23.5.2025
தலைநகர் டெல்லியில் இருந்து புதன்கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியது. இருப்பினும் அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதற்கிடையே நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கித் தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவசரகால பயன்பாட்டுக்கும் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.

அதன்பின் விமானி மோசமான வானிலைக்கு மத்தியிலும் வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கிச் சென்று தரையிறக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

விமானம் எப்படி மீண்டது என்பது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் இருந்து கடந்த 21ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6இ 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, மோசமான வானிலை நிலவியுள்ளது. கடுமையான சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையால் இண்டிகோ விமானம் கடுமையாக குலுங்கியது.

வானிலை காரணமாக சர்வதேச எல்லையை நோக்கி விலகுவதற்காக பாகிஸ்தான் விமானப் படையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பாகிஸ்தான் உதவ முன்வரவில்லை. இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனர்.

ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக விமானம் மேலும், கீழும் தள்ளப்பட்டது. இதனால், அதிகபட்ச இயக்க வேகத்தில் விமானம் செலுத்தப்பட்டது. இந்த சமயத்தில் விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி கீழ் இறங்கிய போதிலும், பைலட்டுகள் சிறப்பாக செயல்பட்டு, ஸ்ரீநகரில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதில், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. விமானத்தின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *