June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தேனிலவுக்கு சென்ற புது மாப்பிள்ளை கொலை: மனைவி உட்பட 4 பேர் கைது

1 min read

Newlyweds murdered at honeymoon spot: 4 people including newlywed arrested

9.6.2025

தேனிலவுக்கு மேகாலயா சென்றபோது, புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். அங்கு கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
அங்கு வாடகை ஸ்கூட்டரில் மே 23ல் வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதி திரும்பவில்லை. அவர்களின், ‘அலைபேசி சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தால், இருவரையும் தேடும் பணியை போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ.,தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா உடல் பாதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடினர்.
இதையடுத்து ராஜாவின் கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா என உறவினர்கள் உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.
புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் மர்மம் விலகியது. கணவரை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். இறந்தவரின் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம் ஆனது.
இது குறித்து சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் கூறியதாவது:-
என் மகள் சோனம் அப்பாவி. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவளால் இதைச் செய்ய முடியாது. அவள் கணவனை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேகாலயா அரசு ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி வருகிறது.
என் மகள் நேற்று இரவு காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவிற்கு வந்தாள், அவள் தன் சகோதரனை அழைத்தாள். போலீசார் தாபாவிற்குச் சென்றனர், அங்கிருந்து அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். என் மகளிடம் என்னால் பேச முடியவில்லை. என் மகள் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். மேகாலயா போலீசார் பொய் சொல்கின்றனர்.
மேகாலயாவில் அவள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி, மத்தியப் பிரதேச முதல்வரை சந்தித்து முறையிடுவோம். மேகாலயா போலீசார் பொய்யான கதைகளை உருவாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *