சமூக வலைதளம் மூலம் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.75 லட்சம் வசூல்
1 min read
Rs 75 lakh collected for girl’s treatment through social media in Karnataka
5.7.2025
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது மகள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் சிறுமியை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர்கள் கூறினர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் ரூ. 7 லட்சம் வரை செலவு செய்த பூசாரியால் இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.
இதையடுத்து பூசாரி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் பயாஸ் என்பவரது செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் உதவி கேட்க கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை தொடர்பு கொண்டு குழந்தையின் தந்தை மற்றும் அவரது ஊரை சேர்ந்த சிலர் பயாஸ்சை சந்தித்து விபரங்கள் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து பயாஸ், கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கினார். பின்னர் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மாலை 6 மணிக்கு அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி கேட்டனர். இதையடுத்து மறுநாள் காலை 10.30 மணிக்கு ரூ.75 லட்சம் வசூலானது. வீடியோ வெளியிட்ட சுமார் 16½ மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ. 75 லட்சம் வசூலானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.