June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்

1 min read

Kamal Haasan takes oath as Rajya Sabha MP

25.7.2025
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள்.

அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றார். அவர் தமிழில் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

அவரைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றனர்.

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் வரும் 28-ந்தேதி பதவியேற்கின்றனர். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனம் நிறைந்த பணிவு மற்றும் மனசாட்சியுடன் மேல்சபை எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டேன். புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். எம்.பி என்ற அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.பிரிவினையின் ஆபத்துகளிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டும். நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.

நான் நாடாளுமன்றத்திற்கு வெறும் விமர்சகராக வரவில்லை. மாறாக இந்தியாவின் கருத்துக்கு உறுதியான பங்களிப்பாளராக வருகிறேன். நான் எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் அதைச் செய்வேன். ஆதரிக்க வேண்டிய இடத்தில், நான் அதை உறுதியுடன் செய்வேன். ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில், அதை ஆக்கப்பூர்வமாக செய்வேன். பெயரளவுக்கு இல்லாமல், ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காகச் செய்வேன்.

அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன். டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன். குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *