June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

1 min read

Manikandan, who killed a sub-inspector, was shot dead in an encounter

7.8.2025
சிறப்பு எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு இடையே போதையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்பின் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். காயமடைந்த தந்தை மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் மணிகண்டன் வெட்டினார். இதனால் சம்பவ இடத்திலேயே சண்முகவேல் உயிரிழந்தார். இதன்பின் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் இருவரும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.
இதனால் சண்முகவேலை வெட்டிய மணிகண்டனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே உப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு சென்றபோது, மணிகண்டன் அவர்களை தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. மணிகண்டன் தாக்கியதில், போலீஸ்காரர் சரவண குமார் காயம் அடைந்தார்.
பின்னர் காவலர்கள் நடத்திய என்கவுண்டரில் மணிகண்டன் பலியானார்.
இதுகுறித்து காயமடைந்த போலீஸ்காரர் சரவண குமார் கூறியதாவது:-
மணிகண்டனை கைது செய்துவிட்டு ஆயுதங்களைக் கைப்பற்ற சென்ற போதுதான் என்கவுண்டர் நடந்தது. திடீரென அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். கயிற்றை நான்தான் பிடித்திருந்தேன். அதனால் என் பக்கமாக அரிவாளை எடுத்து ஓங்கினான். அதில் எனது கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கீழே விழுந்துவிட்டேன். இப்படி செய்தால் சுட்டுவிடுவேன் என்று காவல் ஆய்வாளர் கூறினார். அதன்பின் சுட்டுவிட்டார். உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆனால் தாமதமானதாக், காவல் வாகனத்திலேயே நாங்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். மணிகண்டனுடன் வேறு யாரும் இல்லை. ஒரேயொரு முறை மட்டுமே துப்பாக்கியால் சுடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *