தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி மரணம்
1 min read
DMK Treasurer T.R. Balu’s wife passes away
19.8.2025
முன்னாள் மத்திய மந்திரியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு இன்று காலை தனது 79வது வயதில் காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறது.
மறைந்த ரேணுகா தேவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மறைவு குறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
”முன்னாள் மத்திய மந்திரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.