September 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜிஎஸ்டி வரிகுறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு

1 min read

Government loses Rs 3,700 crore due to GST tax cuts

6.9.2025
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. .

நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.

அதன்படி, 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைவினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரிகுறைப்பால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரிகுறைப்பால், வருடாந்திர அடிப்படையில் நிகர நிதி தாக்கம் ரூ.48 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இருப்பினும் இந்த வரிகுறைப்பால், மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *