October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

ஏமாற்றம் சாதனையில் முடிந்தது: 4,550 குதிரை பொம்மைகளை சேகரித்த பெண்

1 min read

Woman sets Guinness record by collecting 4,550 toy horses

31.10.2026
சிறுவயதில் ஆசைப்பட்ட நிஜ குதிரையை பெற்றோர் வாங்கி தர மறுத்ததால், பொம்மை குதிரைகள் மீது தீராத ஆர்வம் கொண்ட பிரிட்டன் பெண் ஒருவர், இன்று உலக சாதனையாளராக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் மிராண்டா வோர்பி. இவருக்கு சிறு வயது முதலே குதிரைகள் என்றால் கொள்ளை ஆசை. தனக்கு ஒரு நிஜ குதிரை வேண்டும் என்று தனது பெற்றோரிடம் அடம் பிடித்து கேட்டுள்ளார். ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அவரது பெற்றோரால் குதிரை வாங்கி தர முடியவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த மிராண்டா, நிஜ குதிரைக்கு பதிலாக பொம்மை குதிரைகள் மீது தனது பார்வையை திருப்பினார். குறிப்பாக, உலக புகழ்பெற்ற ‘மை லிட்டில் போனி’ என்ற சிறிய பொம்மை குதிரைகளை சேகரிப்பதில் அவருக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது. குழந்தை பருவத்தில் விளையாட்டாக தொடங்கிய இந்த ஆர்வம், நாளாக நாளாக அவரது வெறியாக மாறியது.

எங்கு சென்றாலும், விதவிதமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் இருக்கும் ‘மை லிட்டில் போனி’ பொம்மைகளை தேடி தேடி வாங்க தொடங்கினார். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்த மிராண்டாவின் வீடு, தற்போது பொம்மை குதிரைகளின் சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறது.

அவரது வீட்டில் தற்போது மொத்தம் 4,550 ‘மை லிட்டில் போனி’ பொம்மைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உலகின் மிகப்பெரிய ‘மை லிட்டில் போனி’ சேகரிப்புக்காக மிராண்டாவுக்கு ‘கின்னஸ் உலக சாதனை’ சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி பொங்க பேசிய மிராண்டா, “சிறுவயதில் எனக்கு குதிரை கிடைக்காத ஏமாற்றமே இந்த சாதனைக்கு அடித்தளமாக அமைந்தது. எனது விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறேன்” என்று பெருமிதத்துடன் கூறினார். குழந்தை பருவத்து ஏமாற்றத்தை, உலக சாதனையாக மாற்றி காட்டியுள்ள மிராண்டாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *