ஓமன் அருகே 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்
1 min read
Crude oil tanker carrying 27 Indian sailors attacked by a mine near Oman
31.10.2026
ஓமன் அருகே ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை, அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடப்பதாக சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல் கண்ணிவெடிகளை ஈரான் பதித்து வைத்துள்ளது. இதனால், அந்த கடல் பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் செங்கடலில் செல்லும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பனாமா நாட்டு கொடியுடன் துபாய்க்கு சொந்தமான எம்டி லூயிஸ் 1 என்ற கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வியாழன் அன்று ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த கச்சா எண்ணெய் கப்பலில் 27 இந்திய மாலுமிகள் பயணித்தனர். ஹர்முஸ் ஜலசந்தியில் ஓமன் நாட்டின் கஷாப் பகுதியில் இருந்து 25 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
எஞ்சின் அறையில் பற்றிய தீயை மாலுமிகள் உடனடியாக அணைத்தனர். அதேவேளை, கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 27 பேரும் ஓமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.