நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து; 3 பேர் பலி
1 min read
Accident on Nellai-Eeraduku flyover; 3 dead
7/9/2025
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்றிரவு (செப். 6) சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்த போது, நெல்லை டவுனில் இருந்து ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் அசுர வேகத்தில் எதிரே வந்தனர். இதனை பார்த்த ஓட்டுநர், பேருந்தின் வேகத்தை குறைக்க முயற்சித்தார்.
ஆனால், அதற்குள்ளாக அந்த பேருந்தின் மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் வந்த 3 இளைஞர்களும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து உடனடியாக பேருந்தை விட்டு இறங்கிய ஓட்டுநரும், நடத்துடரும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் சிக்கிய மூவரையும் பரிசோதித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே மூவரும் இறந்துவிட்டதை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து, அங்கு வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நெல்லை டவுன் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23), முகமது அலி தெருவை சேர்ந்த சந்தோஷ்(22) மற்றும் சாதிக் (22) என்பது தெரியவந்தது.
சாதிக், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்திலும், லோகேஷ், நெல்லை டவுனில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திலும் வேலை செய்து வந்துள்ளனர். சந்தோஷ், கோவையில் உள்ள லேத் ஒன்றில் பணியாற்றிய நிலையில் அவர் டவுனில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நண்பர்கள் மூவரும் ஒரே பைக்கில் நெல்லை சந்திப்பு நோக்கி வந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.