காஷ்மீரில் 2 வீரர்கள் வீர மரணம்; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
2 soldiers martyred in Kashmir; 2 terrorists killed in gunfight
9/99.2025
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துககு உட்பட்ட கடார் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசாரைக்கொண்ட கூட்டுப்படையினர் நேற்று அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வீரர்கள் முன்னேறியபோது, அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கர மோதலில் ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். ராணுவம் அந்த வீரர்களை சுபேதார் பெர்பத் கவுர் மற்றும் லான்ஸ் நாயக் நரேந்தர் சிந்து என அடையாளம் கண்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், “தேசத்திற்காகப் பணியாற்றிய துணிச்சலான வீரர்களான பெர்பத் கவுர் மற்றும் நரேந்தர் சிந்து ஆகியோரின் உயர்ந்த தியாகத்தை ராணுவம் கவுரவிக்கிறது. அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், துயரமடைந்த அவர்களது குடும்பங்களுடன் உடன் நிற்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது” என்று பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.