August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு; ஐகோர்ட்டு விடுவிப்பு

1 min read

Court orders imprisonment of Deputy Superintendent of Police; High Court debate

9.9.2025
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.

இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார். இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சீபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்று வர ஜீப்பில் ஏறி சென்றார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து அறிந்த டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் உடனடியாக கிளை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துவிட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார்.

இந்த சூழலில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்” என்றார்.

அதற்கு நீதிபதி, அப்படியென்ன போலீஸ் அதிகாரிக்கும், நீதிபதிக்கும் முன்பகை இருக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல், “துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிபதிகளுக்கு எதிராக சில புகார்களை தெரிவித்தார். அதற்காக பழிவாங்கும் விதமாக நீதிபதி செயல்பட்டுள்ளார். பேக்கரியில் மோதல் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. கடந்த 4-ந்தேதி ஏன் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனே போலீசார் அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் ஏன் அவர்களை கைது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி, நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை துணை போலீஸ் சூப்பிரண்டை கோர்ட்டில் அமரவைத்து, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4-ன் கீழ் துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மாவட்ட நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தரப்பிலும் வக்கீல் ஒருவர் ஆஜராகி வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தாக்கல் செய்தால், இன்று பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார். மேலும், “இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ வழக்கத்துக்கு மாறான சம்பவம் நடந்துள்ளது” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி.யை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *