ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் மரணம்; கொரோனா காலத்தில் அதிகம் அறியப்பட்டவர்
1 min read
IAS officer Beela Venkatesan passes away; most popular during Corona era
4.8.2025
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக இன்று (புதன்கிழமை) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.
இவர் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் 1969 ஆம் ஆண்டு பிறந்தார். 1997 ஆம் ஆண்டு பேட்ஜ் இந்திய ஆட்சிப்பணி(ஐஏஎஸ்) அதிகாரியாவார்.
இவரது தந்தை வெங்கடேசன் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் ராணி சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.(2006ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.)
பீலா வெங்கடேசன் செங்கல்பட்டு துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறையின் திட்ட இயக்குநராக இருந்த பீலா வெங்கடேசன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராகவும், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில், கொரானா தொற்று தொடர்பான விவரங்களை விளக்கமாக சொல்லி வந்தார். அப்போது சாதாரண மக்களுக்கும் இவர் எளிதில் அறிமுகமானார். இவரது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பீலா வெங்கடேசனுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவரது கணவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் பீலா வெங்கடேசன்.
இந்த நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை இறந்தார்.
இவர் ராஜேசை திருமணம் செய்தபின்னர் தன்னுடைய பெயரை பீலாராஜேஷ் என்றே சொல்லி வந்தார். கணவரை பிரிந்த பின்னர் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பெயரை டாக்டர் பீலா வெங்கடேசன் என்று மாற்றம் செய்தார். இனி வரும் காலங்களில் தான் பீலா வெங்கடேசன் என்றே அழைக்க வேண்டும் என்று அறிவித்தார்.