கே.கே.சி. பாலுவிற்கு கலைமாமணி விருதா? விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு
1 min read
KKC Balu to receive Kalaimamani award? Opposition from the Liberation Tigers of Tamil Nadu
25.9.2025
விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை,இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்கக்கூடியது.
இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும் நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன், பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துகள்.
இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி.பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் “வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்” என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு. இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.