June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம்- ஐ.நா.வில் இந்தியா பதிலடி

1 min read

We stopped the attack only because Pakistan begged us to – India’s response at the UN

28.9.2025
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசினார்கள்.

இதற்கிடையே ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தலையிட்டு நிறுத்தியதாக தெரிவித்தார்.
டிரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால் ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிவித்தார்.

இப்போரை நிறுத்தியதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்றும் பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்றும் இந்தியா பலமுறை திட்டவட்டமாக கூறி உள்ளது. ஆனால் போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதமர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார். மேலும் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறிய அவர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரம், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டவற்றை பற்றியும் பேசினார்.
பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.பொதுச்சபையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகசெயலாளர் பெட்டல் கஹ்லோட் பேசியதாவது:-
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் அபத்தமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார். பயங்கரவாதம் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்காளியாக நடித்து ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கெஞ்சியது. மே 9-ந்தேதி வரை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்களை மேற்கொண்டது.
ஆனால் மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் நேரடியாக கெஞ்சியது. இதனால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தவொரு பிரச்சனையிலும் எந்த 3-ம் தரப்பினரும் தலையிட இடமில்லை.
இந்த சண்டையில் இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டது.
பயங்கரவாத செயல்களுக்கு எதிராக எங்கள் மக்களைப் பாதுகாக்கும் உரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். பாகிஸ்தான் உண்மையிலேயே அமைதியை விரும்பினால் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அணு ஆயுத மிரட்டல் என்ற போர்வையில் பயங்கரவாதம் நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது. இதை உலகிற்கு தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *