ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடுவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min read
Will the Prime Minister release an RSS commemorative coin? – MK Stalin condemns
2.10.2025
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நிலையில் இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே விரைவில் குணமடைய வேண்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுகிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.