கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு
1 min read
HC condemns Thaveka: Special committee headed by Asra Garg to investigate Karur incident
3.10.2025
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து வருகிறார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. என்ன மாதிரியான கட்சி இது. தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை.
விஜய் மீது கருணை
கட்சித் தலைவர் விஜய் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டார். வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது அவரது மன நிலையை காட்டுவதாக உள்ளது. சூழ்நிலை முற்றிலும் தவறாக கையாளப்பட்டுள்ளது. மாநில அரசு விஜய் மீது கருணை காட்டுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.