ஆப்கானிஸ்தான் மந்திரி நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய அரசு விளக்கம்
1 min read
Central government explains ban on female reporters at Afghan ministerial event
11.10.2025
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் புதுடெல்லிக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது.
இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் அவர் நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது முத்தகி, பெண்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி முத்தகி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவித்து உள்ளது.