June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மு.க.ஸ்டாலின் பேட்டி

1 min read

heavy rain: Precautionary measures in Chennai – Interview with M.K. Stalin

28.11.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அனைவருக்கும் வணக்கம்

29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய தேதிகளில் தெற்கு பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள். ரெட் அலர்ட் விடுத்திருக்கும் மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொண்டோம். ஏற்கெனவே, நேற்றையதினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைவரும் அவரவர்களுக்குரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார்கள். ஏற்கெனவே, எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறோம். மின் கம்பிகள் எங்கும் அறுந்து விழாமல் விபத்து ஏற்படாமல், கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். எனவே, எச்சரிக்கை செய்யும் அந்த பணியைதான் இன்றைக்கு நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி – சென்னைக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களா? சென்னையில் எந்தமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம்? அது பற்றி…

முதல்-அமைச்சர் பதில் – சென்னையும் பாதிக்கப்படும். சென்னையிலும் அதிகம் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள்.

கேள்வி – நேற்று பேசும்போது, ஏழைகள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். இதற்கான முகாம்கள், உணவுப்பொருட்கள் தயார் நிலை பற்றிமுதல்-அமைச்சர் பதில் – தேவையான இடங்களில் முகாம்களும், அங்கு உணவுகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி – பொறுப்பு அமைச்சர்கள் – கண்காணிப்பு அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா? அதுபற்றி…

முதல்-அமைச்சர் பதில் – ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.கேள்வி – டெல்டா மாவட்ட மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிவருகிறார். அதுபற்றி…

முதல்-அமைச்சர் பதில் – அவர் வஞ்சிக்காமல் இருந்தால் போதும். அதான் முக்கியம். அவர் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதுபோன்று எதுவும் கிடையாது. அவர் எப்போதும் அப்படிதான் சொல்லிக்கொண்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

கேள்வி – புயலை எதிர்கொள்ள எல்லாவற்றிலும் தயாராக இருக்கிறதா? அது பற்றி…

முதல்-அமைச்சர் பதில் – தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *