June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளிக்க டிசம்பர் 11 வரை அவகாசம்

1 min read

Deadline for returning SIR forms is December 11

30.11.2025
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடப்பாண்டில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. எனினும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து தேர்தலும் முடிந்து என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பு அறிவித்தது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்திலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.

இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது என்பது இயலாதது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் பலர் மனஅழுத்தம், நெருக்கடி என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் 4-ந்தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில், இந்த கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தமிழகம், கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்பின்னர், டிசம்பர் 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *