June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்

1 min read

Lok Bhavan to be renamed immediately in Congress-ruled Telangana

3.12.2025
நாட்டின் மாநிலங்களில் மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படும் கவர்னர்கள் தங்க கூடிய கவர்னர் மாளிகை, ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ் பவன் பெயரை, லோக் பவன் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, ராஜ் பவன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கையாக முன்வைத்து பேசினார். இந்த பெயர் காலனி ஆதிக்கத்தின் கீழ் நாடு இருந்தது என நினைவூட்டும் வகையில் உள்ளது என குறிப்பிட்டார்.

இந்நிலையில் ராஜ் பவன், லோக் பவன் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்படி, கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும். இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கடந்த நவம்பர் 30-ந்தேதி மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த கவர்னர் மாநாட்டில் கவர்னர் ரவி முன் வைத்த கோரிக்கையின் பெயரில் இந்த பெயர் மாற்றம் அமைந்துள்ளது என்றும் இதனை வரவேற்கிறோம் என்றும் தமிழக கவர்னர் ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் கூறினார். கவர்னர் மாளிகை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து உடனடியாக, தெலுங்கானாவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆளும் தெலுங்கானாவில் மத்திய அரசின் உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ராஜ் பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதற்கு பதிலாக லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *