கடையம் ரவுடி பாலமுருகன் மனைவி குழந்தைகள் விஷம் குடித்தது மனைவி பலி- 2 மகள்கள்
1 min read
Kadayam Rowdy Balamurugan’s wife and children drank poison, wife dies – 2 daughters
17.12.2025
தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணபுரம் பகுதியைச் சார்ந்த பிரபல ரவுடி பாலமுருகனின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மனைவி பலியானார். 2 பெண் குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவர் மீது தமிழக கேரளா மாநிலங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை உட்பட 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலமுருகனை கடந்த மாதம் விருதுநகர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ஆஜர் படுத்திய போலீசார் மீண்டும் திருச்சூர் சிறையில் அடைக்க பாலமுருகனை அழைத்துச் சென்றனர். அப்போது பாலமுருகன் திருச்சூர் சிறை வாசலில் போலீசாரிடமிருந்து தப்பித்து தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி கடையம் ராமநதி அணை அருகே உள்ள மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அவரை பிடிக்க பொத்தையின் மேல் ஏறிய போலீசார் இறங்க முடியாமல் தவித்தனர். அந்த போலீசாரை 50க்கும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் ரவுடி பாலமுருகனை சுற்றி வளைத்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்காமல் ரவுடி பாலமுருகன் தப்பி ஓடிவிட்டான். அதனைத் தொடர்ந்து போலீசார் பாலமுருகனை தீவிரமாக தேடிவந்த நிலையில் பாலமுருகனின் மனைவியான ஜோஸ்பினாளை சந்தித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரை போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஜோஸ்பினாள் குழந்தைகளுடன் ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்ட ஜோஸ்பினாள் இரண்டு தினங்களுக்கு முன்னர் உறவினர் வீட்டில் வைத்து தனது இரண்டு மகள்களான மகாலெட்சுமி (வயது 14) மற்றும் பிரிய தர்ஷினி(வயது 14) ஆகியோருக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து விட்டார்.
இதனை கண்ட உறவினர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அழைத்து வந்த நிலையில் ஜோஸ்பினாள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு மகள்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.