June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தல் வெற்றி- பிரதமர் மோடி பாராட்டு

1 min read

Prime Minister Modi congratulates Maharashtra’s local body election victory

22.12.2025
மராட்டியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றதற்காக பா.ஜ.க. சார்பில் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 20 என 2 கட்டங்களாக 286 நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 10 மணியளவில் நடந்தது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த 129 பேர் நகராட்சி கவுன்சில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சிவசேனா, பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய 3 கட்சிகள் கொண்ட மகாயுதி கூட்டணி நகர கவுன்சில் தலைவர்களாக 75 சதவீதம் அளவுக்கு வெற்றியை பெற்றுள்ளது.

இதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த 3,300 வேட்பாளர்கள் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் இதனை தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், பிரதமர் மோடி இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது என்றார். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட எங்களுடைய அரசின் மீது உள்ள நம்பிக்கை இந்த வெற்றியால் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். மராட்டியம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நோக்கங்களையும் நிறைவேற்ற புதிய சக்தியுடன் நாம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவோம் என தெரிவித்து உள்ளார்.

அடிமட்ட அளவில் கடுமையாக பணியாற்றிய பா.ஜ.க. மற்றும் கூட்டணியின் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், தேர்தல் ஆணையமும் தான் காரணம் என்று காங்கிரஸ் வழக்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து மராட்டிய காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் கூறுகையில், ‘தேர்தல் கமிஷனின் ஆசிர்வாதத்தால் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியின் கைப்பாவையாகி விட்டது.

தேர்தல் கமிஷனின் குழப்பமான செயல்பாடு மற்றும் தேர்தலுக்காக ஆளும் கட்சி பணத்தை வாரி இறைத்ததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஊழல் மற்றும் எந்த நலத்திட்டங்களையும் செய்யாததால், ஆளும் கட்சியின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகமும், அரசியலமைப்பும் ஒடுக்கப்பட்டுள்ளன,’ என்றார்.

உத்தவ் தாக்கரே சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறுகையில், ‘இவை அனைத்துக்கும் மேலாக, மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட முறைகேடுகளே காரணம்,’ எனக் குற்றம்சாட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *