சபரிமலையில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்
1 min read
2.25 lakh people visit Sabarimala in 3 days
2.1.2026
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 11 மணி வரை நெய்யபிஷேகத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதன் நள்ளிரவு சன்னிதானத்தில் கேரள போலீஸ் சார்பில் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தலைமையில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. மகர விளக்கை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு நேற்று வரை 3 நாட்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.