மாஞ்சோலையில் பலத்த மழை-மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
1 min read
Flood at Manimutharu Falls
2.1.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் மாஞ்சோலை பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையினால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது இந்த அருவி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. இங்கு குளிப்பதற்காக பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
குறிப்பாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவு மக்கள் இங்கு வந்து சென்றனர் இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று இரவு திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய மிக கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக மாஞ்சோலை பகுதியில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர்
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் மழையால் சுமார் 30 நாட்கள் அருவி மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த 25ஆம் தேதி தான் இங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.