குற்றாலம் அருவிகளில் வெள்ளம்- குளிக்க தடை
1 min read
Flooding at Courtallam Falls – Bathing prohibited
2.1.2026
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு விடியவிடிய பெய்தது பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை கடையநல்லூர் புளியங்குடி வாசுதேவநல்லூர் சிவகிரி பகுதிகளில் நேற்று இரவு விடியவிடிய பலத்த மழை பெய்தது இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த மாதம் நெல் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அனைத்து குளங்கள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் இடைவிடாமல் பெய்தது.
கடனாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 52 கனஅடி நீர் வந்த இடத்தில் இன்று காலை வினாடிக்கு 1,265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் ராமநதி அணைக்கு 312 கனஅடியும், கருப்பாநதியில் 25 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது.
கடனாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அணை அடிவாரத்தில் உள்ள சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, சம்பன் குளம், கல்யாணிபுரம் சுற்றுவட்டாரத்திலும் மிக கனமழை கொட்டியது.
ராமநதியில் 12 சென்டி மீட்டரும், கருப்பாநதியில் 7½ சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதேபோல் கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்தது. நேற்று அதிகாலை வரையிலும் சற்று கூட இடைவெளி விடாமல் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீர் கனமழையால் மக்கள் அவதி அடைந்தனர்.