June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மோடி பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்பு

1 min read

Amit Shah to attend Modi’s Pongal celebrations

5.1.2026
தமிழக பாஜக சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது.

‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’வுக்காக மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, நுழைவுவாயிலில் அலங்காரத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. பொங்கல் வைப்பதற்காக பெண்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர்.

1,008 பேர் பொங்கல் வைக்க ஏதுவாக மைதானம் 50 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாக்ஸிலும் 20 பேர் பொங்கல் வைக்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் 7-க்கு 7 அளவிலான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சிமென்ட், செங்கல் அடுப்பு இருந்தது.

பெண்களுக்கு பொங்கல் வைக்கத் தேவையான சில்வர் பானை, விறகு, 250 கிராம் பச்சை அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரை, நெய், 3 லிட்டர் தண்ணீர் மற்றும் 3 கரும்பு, குடிப்பதற்கு 250 மில்லி பாதாம் பால், வாழைப்பழக் கேக் ஆகியவை வழங்கப்பட்டன.
விழா மேடையின் பக்கவாட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேடைக்கு இடது புறம் பசுமாடு கன்றுடன் நிறுத்தப்பட்டிருந்தது. பெண்கள் பட்டு புடவை அணிந்து, குடும்பத்தினருடன் வந்திருந்ததனர்.
மேடையின் இருபுறமும் காளை அடக்கும் வீரர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விழா மேடை முழுவதும் வாழை மரம் மற்றும் கரும்புகள் கட்டப்பட்டிருந்தன. பெண்கள் கோலமிட்டு பொங்கல் வைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 12.20 மணிக்கு விழா நடைபெற்ற மைதானத்துக்கு வந்தார். மேடைக்கு வலதுபுறம் அவரது கான்வாய் வந்ததும் காரிலிருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரம் நடந்து சென்று திரளாக பெண்கள் பொங்கல் வைப்பதை கண்டு ரசித்தார்.
விழா மேடையிலிருந்து 20 அடி நீளத்துக்கு ரேம்ப் அமைக்கப்பட்டு அங்கு பொங்கல் வைக்க சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு முன்பு வந்த அமித் ஷாவுக்கு அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.
அதை ஏற்றுக் கெண்டு, விழா மேடை முன்பிருந்த சிறிய திறந்தவெளி மேடை மீது ஏறினார். அங்கு பெரிய பொங்கல் பானையில் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை கிண்டினார். பின்னர் அங்கிருந்து பொங்கல் விழாவுக்கு வந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றார்.
இதனிடையே, வெயிலின் தாக்கத்தால் வயலூரைச் சேர்ந்த நாகஜோதி (30) என்றப் பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று அங்கிருந்த முதலுதவி மையத்தில் முதலுதவி அளித்தனர். மேடையிலிருந்த தமிழிசை சவுந்தராஜன் உடனடியாக கீழே இறங்கி வந்து அப்பெண்ணுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், அர்ஜுன் மேக்வால், மூத்தத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் தலைவர் கவிதா, துணைத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்டத் தலைவர் மலர்கொடி, திருச்சி பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

=
பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும்; மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை பேச்சு
பொங்கல் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற பாஜகவே காரணம். உலக வரலாற்றில் எந்தவொரு நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு தன்மை நமது பொங்கலுக்கு இருக்கிறது. மனித நாகரிகம், கலாசாரத்தை பார்க்கும் போது, பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும். நான்கு நாள் பொங்கல் விழா. தமிழர் கலாச்சாரத்தில் மட்டும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜ கட்சி சில ஆண்டுகளாக நம்ம ஊரு பொங்கல் என்ற பெயரில் மக்கள் உடன் இணைந்து கொண்டாடி வருகிறது.
இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள்.

நியாயப்படி, திமுக இன்னைக்கு மாதம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். யார் எல்லாம் காளை வளர்க்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

வாக்குறுதிகள் அப்படி சொல்லிவிட்டு 4 ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர்களின் ஆட்சியே முடிய போகிறது. காளை வளர்க்கும் எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வர் ஸ்டாலின் காளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் மகளிருக்கு பாதுகாப்பாக இந்த அரசு இருக்க வேண்டும். இப்பொழுது அரசு பாதுகாப்பாக இல்லாமல் இருக்கிறது. எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *