சந்திரகாச்சி – தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று தொடக்கம்
1 min read
Amrit Bharat train service between Chandrakachi – Tambaram starts today
18.1.2026
இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு – பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.
தமிழகம் – மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி – திருச்சி, நாகர்கோவில் – ஜல்பாய்குரி, தாம்பரம் – சந்திரகாச்சி இடையே அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஜல்பாய்குரி – திருச்சி மற்றும் ஜல்பாய்குரி- நாகர்கோவில் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், சந்திரகாச்சி – தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று தொடங்கியது. இது குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06108) (இன்று) 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். சந்திரகாச்சி – தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.