தேஜக கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு
1 min read
Edappadi Palaniswami welcomes T.T.V. Dhinakaran who joined the TJK alliance
21.1.2026
தேஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்தது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அன்போடு வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: –
அமமுக மட்டுமல்ல தமிழகத்திற்கே நல்லதொரு காலத்தின் தொடக்கம் இது. மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்களது ஆதரவை தெரிவிக்க புறப்பட்டு செல்கிறோம்.
விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளிச் சண்டை தான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்று சொல்லி ஏற்கனவே நாங்கள் பொதுக்கூட்டத்தில் சொன்னேன்.
நாம் பழையதை நினைத்து கொண்டு கட்சி நலனையும், தமிழகத்தின் நலனையும் பின்னுக்கு தள்ள கூடாது. எல்லாவற்றையும் இணைக்கிற சக்தியாக, ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு துணையாக இருப்போம். மக்கள் ஆட்சி மீண்டும் வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு உறுதுணையாக இருப்போம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக்காப்போம், தமிழகத்தை மீட்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.