June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார் எழுதியிருந்த உருக்கமான கடிதம்

1 min read

A heartfelt letter written by Kadayam Union Councilor Marikumar

23.1.2026
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்குமார் (வயது 33) இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில இளைஞரணியின் பொதுச் செயலாளராகவும், கடையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வந்தார்.

இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் இரண்டாவதாக அனுசுயா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். மாரிக்குமாருக்கு முதல் மனைவியின் மூலம் கிருத்திக் என்ற மகனும் இரண்டாம் மனைவியின் மூலம் முத்து ரித்திகா என்ற மகளும் உள்ளனர்.

21.01.2026 அன்று காலை 10 மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற மாரிக்குமாரை குடும்பத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 22.01.2026 காலை 9 மணிக்கு மரணமடைந்தார்.

மாரிக்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கையொப்பமிடாத ஒரு நீண்ட கடிதத்தை டைப் செய்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதில் கூறப்படு வதாவது:-

வாழ்க்கையில் நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடித்த காரணத்தினால் நான் எடுத்த முடிவு.
எனக்கு என் தந்தையும் தாயும் என்னை நல்லா படிக்க வைத்து உயரிய பட்டங்களை வாங்க வைத்து சிறப்பாக வளர்த்தனர்.. நானும் சிறப்பாக தான் படித்தேன். இருந்த போதும் என் மனதில் ஏற்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட விருப்பம் காரணமாக அரசியல் செய்தேன். என்னால் ஆன அனைத்து உதவிகளையும், சேவைகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் பிரதிநிதியாக இருந்து பொதுமக்களுக்கும் சேவை செய்தேன்.

நான் பொது மக்களுக்கு சேவை செய்வதுடன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உழைப்பதிலும் கவனத்தைக் கொண்டு எனக்கென்று ஒரு தொழில் தொடங்காமல், வருமானத்திற்கு வழியில்லாமல் பல கடன்களை வாங்கிக் கொண்டு வாழ்க்கையில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

எனது மனைவியின் நகைகளை கூட விற்று வாழ வேண்டிய நிலையில் இதற்கு மேலும் வாழ வேண்டாம் என்று நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

நான் வாழும் ஒவ்வொரு நாட்களும் கடன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

எனது குடும்பத்தாராகிய எங்க அம்மா ராஜேஸ்வரி பழனியாச்சி மாரி சாரதா இசக்கி ராஜன் மீனா சௌந்தர்யா ரேணுகா ஆகியோருக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் எனது தந்தைக்கு சேரும் சொத்தை (3/150 & 3/149) எனது மகன் முத்து ஹிர்த்திக் பெயருக்கும், எனது மகள் முத்து ரித்திகாவிற்கும் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எந்த பிரச்னையும் பண்ண வேண்டம் மாரி. நீங்க எல்லாரும் சேர்ந்து என் பிள்ளைகளுக்கு கொடுத்துருங்க ப்ளீஸ் ப்ளீஸ்

அம்மா நான் ஒயின்ஸ் மாரியப்பன் இடம் ரூபாய் 5 லட்சம் (3 லட்சம் நான் வாங்குனது + 1 லட்சம் பத்திர செலவு +1லட்சம் வட்டி இந்த நாள் வரை ) கொடுக்கணும். அதற்கு ஈடாக நமது கிராமத்தில் வீட்டில் உள்ள ஒரு பத்திரத்தில் எனது பங்கு ( பிரிவின்றி பாதி ) அவனுக்கு பத்திர ஆபீஸ்ல எழுதி கொடுத்துட்டு பணம் வாங்கி இருக்கேன் அதுக்கு மட்டும் நீ எப்படியாவது பணம் கொடுத்துட்டு உனக்கு பின்னாடி என் மகன் ஹரித்திக் மற்றும் ரித்திகாக்கும் கொடுக்கணும்னு கேட்டுக்கிடுதேன். மாரி சாரதா, டோனி சார், ராம் மோகன் அண்ணன் எப்படியாவது அந்த வீட்டை வாங்கி கொடுத்துருங்க.

திருச்சி டோனி சார், நம்ம ப்ராஜெக்ட் என்னைக்காவது ஒரு நாள் நிறைவேறும். கண்டிப்பா என் குடும்பத்திற்கு உதவி பண்ணுவீங்கன்னு நம்புறேன். என் பையன் பொண்ணு படிப்பு மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணா.நம்ம ப்ராஜெக்ட் நம்பி ரொம்ப நாளா காத்திருக்கேன். நான் உழைத்த உழைப்பு அதன் அதிகம்.

நான் மிகப்பெரிய துரோகம் ஒன்னு செய்றேன்னா அது என் மனைவி அனுசியாக்குத்தான். உன்னாள் என்னை மன்னிக்க முடியாது.கண்டிப்பா என்ன மன்னிச்சிரு. மீண்டும் நான் உன்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துட்டேன் . என்னோட ஆசை நீ கடைசி வரைக்கும் கடையத்தில் இருக்கணும். கடையத்துல தான் இருந்து வாழனும்.

அம்மா அனுசியா ஹிர்த்திக்கு ரித்திகா எல்லாத்தையும் நல்லா பாத்துக்கோ. தம்பி வேன் ல ஸ்கூலுக்கு அனுப்புங்க. அவன் என்னை ரொம்ப தேடுவான். அம்மா ஹ்ரித்திக் கேட்டதெல்லாம் முடிஞ்ச அளவுக்கு வாங்கி கொடும்மா. சுரேஷ் நீ கொஞ்சம் school fee கட்டிரு.

ராம் மோகன் அண்ணன் நீங்க எனக்கு தர வேண்டிய பணத்தை என் மனைவி கிட்ட கொடுத்திருங்க.கொஞ்சம் சீக்கிரமாக கொடுங்க.
என்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. நான் மேலே கூறிவற்றை மட்டும் எனது குடும்பத்தாரும், அரசாங்கமும் செய்து கொடுக்க வேண்டுகிறேன்.
எங்க தூத்துக்குடி மாமா, அத்தை, குமார், புவனா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.

எப்படியாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரா டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கணும் இது என்னோட ஆசை. டாக்டர் செல்லக்குமார் அவர்களால் மட்டுமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆட்சிக்கு கொண்டு வர முடியும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி அமல்படுத்த முடியும்.

என் பையன் முத்து ஹ்ரித்திக் ஸ்கூல் டே பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. டான்ஸ் ஆடுவான்…பாக்கணும் போல இருக்கு.
பாப்பா க்கு ஒரு வயசு ல மொட்டை போட்டுருங்க. முடி ரொம்ப அதிகமா இருக்கும்.

அம்மா, நான் தொட்டதெல்லாம் தோல்வியா இருக்கும்போது எப்படிம்மா என்னால் வாழ முடியும்…

புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைச்சுட்டேன். ஒரு தொழில் வருமானம் இல்லாம நாசமா போயிட்டு என் வாழ்க்கை… என அந்த உருக்கமான கடிதம் முடிவடைகிறது.

மாரிக்குமார் தற்கொலை குறித்து அவரது மனைவி அனுசுயா அளித்த புகாரின் அடிப்படையில் கடையம் காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.இநத சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *