பாபநாசம் கோவிலில் நகை-பணம் திருடிய கோவில் நிர்வாக அதிகாரி கைது
1 min read
Temple administration official arrested for stealing jewelry and money from Papanasam temple
30.1.2026
நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது நகை-பணம் திருடிய கோவில் நிர்வாக அதிகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி இன்று நடைபெற்றது . இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் கோமதி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காணிக்கைபணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் காணிக்கை பணம் மற்றும் நகைகளை நைசாக எடுத்து பதுக்கியதாக கூறப்படுகிறது.
இதனை காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து, கோவில் ஆய்வாளர் கோமதியிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் சிசிடிவி கேமரா மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிய நபர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஒரு கிராம் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.8,300 ஆகியவற்றை நைசாக திருடி பதுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நகை, பணத்தை மீட்டனர்.
பாபநாசம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை கண்காணிக்கும் கோவில் நிர்வாக அதிகாரியே நகை-பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.