தமிழகத்தில் கடந்த மாதம் மட்டும் 1500 பேருக்கு டெங்கு, 206 பேருக்கு எலி காய்ச்சல்
1 min read
In Tamil Nadu, 1500 people contracted dengue and 206 people contracted rat fever last month alone.
3.2.2026
தமிழகத்தில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 1,500 பேர் டெங்கு காய்ச்சல்; 206 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தமிழகத்தில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு, புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய கொசு ஒழிப்பு பணியாளர்களை, இப்பணிகளுக்கு தமிழக அரசு பயன்படுத்தியது. இதனால், மாநிலம் முழுதும் கொசு ஒழிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எலி காய்ச்சலால் 206; சிக்குன்குனியாவால் 43; மலேரியாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வகை காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு 25,521 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 321 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, இருவர் இறந்தனர். கடந்த ஆண்டின் தொடர்ச்சியாக, ஜனவரியில் டெங்கு போன்ற பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அதேநேரம், சிக்குன்குனியா பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளது.
இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள், மார்ச் மாதத்திற்கு பின் குறைய துவங்கும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில், நன்னீர் தேங்காதவாறு சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.