வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் வெற்றி- மோடி வாழ்த்து
1 min read
Modi congratulates Tariq Rahman on victory in Bangladesh general election
13.2.2026
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.
இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.
இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.