தூத்துக்குடி கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றவர் கைது
1 min read
Man arrested for attempting to commit fraud using Thoothukudi Collector’s photo
14.2.2026
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலியான கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடவிருந்த உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசாமியை சைபர் குற்றப்பிரிவு போலீசார் தடாலடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் புகைப்படத்தை காட்சி படமாக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், கணக்குகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)தீபு மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (வயது 21) என்பவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான கணக்குகளை உருவாக்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் எதிரி அனுஜ் குமாரை கடந்த 09.02.2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் சென்று கைது செய்து நேற்று முன்தினம் (12.02.2026) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் டைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட இருந்த எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.