June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

1 min read

Request to remove encroachments in the Courtallam temple area

15.2.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டதால் கோவில் விழா காலங்களில் வளம் வரும் சப்பரங்கள் சன்னதி பஜார் வடக்கு சன்னதி பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டது எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பாஜக சார்பில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் நகர பாஜக சார்பில் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருக்குற்றால நாதசுவாமி கோவிலில் பல நூற்றாண்டு காலமாக வடக்கு சன்னதி பஜார் வழியாக கோவில் சப்பரம் சென்று வந்தது அப்போதெல்லாம் வடக்கு சன்னதி பஜாரில் சுமார் 40 அடி அகலமான சாலை இருந்தது. 2013 க்கு பிறகு சிலர் சுயநலத்திற்காக அன்றைய காலகட்டத்தில் இருந்த அறங்காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு சாலைகளில் கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதனால் கோவில் சப்பரங்கள் வடக்கு சன்னதி பஜார் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி பலமுறை கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை இதனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு குற்றாலத்தில் பல்வேறு துயர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக புகழ்பெற்ற சித்திரை சபையில் உள்ள தெப்பக்குளத்தில் இரண்டு துர்மரணங்கள் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கஜமுகன் என்று பக்தர்களால் அழைக்கப்படும் யானை ஒன்று குற்றாலம் மெயின் அருவியில் வந்து விழுந்து உயிரிழந்தது.

மூன்றாவதாக குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான சன்னதி பஜார் – மெயின் அருவி செல்லும் பாதைகளில் உள்ள கடைகளில் பட்ட பகலில் தீ பிடித்து ஏராளமான கடைகள் தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து கடைகளை ஏலம் விட நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் அந்தப் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக கடைகள் ஏலம் விடப்பட வில்லை. இதனால் கோவில் நிர்வாகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களுக்கு திருக்குற்றாலநாதரின் சப்பரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்லாததே காரணம் என்று ஆன்மீக பெரியோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே உடனடியாக குற்றாலம் பகுதியில் உள்ள குறிப்பாக சன்னதி பஜார், வடக்கு சன்னதி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதோடு வரும் காலங்களில் திருக்குற்றால நாதர் சப்பரம் குற்றாலத்தின் அனைத்து வீதிகளிலும் வலம் வரும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்தக் கோரிக்கை மனு மீது 30 நாட்களுக்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலாளர் சரவண கார்த்திகேயன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, குற்றாலம் நகர தலைவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் இந்த கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மேலகரம் ஈஸ்வரன், குடியிருப்பு மாடசாமி என்ற செல்லத்துரை, பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குற்றாலம் செந்தூர் பண்டியன், மாவட்ட பாஜக பட்டியல் அணி பொதுச் செயலாளர் பால்ராஜ், பாஜக கலை தலைவர்கள் செல்வராஜ், மணிகண்டன், மதன் , முத்துப்பாண்டியன், நாகராஜ், வெங்கடேஷ், கண்ணன், ஜெயக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குற்றாலம் நகர பாஜக தலைவர் திருமுருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *