June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

1 min read

DMK-Congress seat-sharing talks

28.2.2026
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டுள்ளோம். அவர்களும் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு தருவதாக ஏற்கெனவே முதல்-அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக, நம்பிக்கையோடு சென்றுகொண்டிருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை.

திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கைக்கூட்டணி, இயற்கையான கூட்டணி, நம்பிக்கையான கூட்டணி. இது உறுதியான கூட்டணி, தமிழகத்தை, தமிழக மக்களை பாதுகாக்கும் கூட்டணி, மதவாதிகளை, மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களை விரட்டுகிற கூட்டணி. ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற சக்திகளை தமிழகத்தில் விடமாட்டோம்.

வேறு கட்சியுடன் பேச்சு என்று கிரிஷ் சோடங்கர் கூறவில்லை. நாங்கள் திமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *