பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி தவெக திடீர் ஆலோசனை
1 min read
Sudden consultation on alliance with BJP
13.3.2026
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் கமிஷன் இன்னும் 2 நாளில் அறிவிக்க உள்ளது. சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டி நிலவும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து என களம்காண இருக்கின்றன.
இந்த 4 முனைப்போட்டியை 3 முனைப்போட்டியாக்கும் முயற்சிகள் இடையில் நடந்தன. அதாவது, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் த.வெ.க.வையும் கொண்டுவர பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்தது. ஆனால், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. தவெக தனித்தே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கூட்டணிக்கு செல்லலாமா என தவெக திடீர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டணிக்கு பாஜக முயற்சிக்கும் சூழலில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த ஆலோசனையில் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றனர். இவர்களில் 98 பேர் இந்த கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தனித்து போட்டியிட்டால் திமுகவின் கடைசி நேர நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. 23 கட்சிகளுடன் பிரமாண்ட கூட்டணியை திமுக உறுதி செய்துள்ள நிலையில் அதிமுக தரப்பில் தவெக, விஜய் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.