திருமணம் முடிந்த ஆண் லிவ் இன் உறவில் இருப்பது குற்றமல்ல- ஐகோர்ட் உத்தரவு
1 min read
It is not a crime for a married man to be in a live-in relationship – High Court rules
28.3.2026
திருமணமான ஒரு ஆண், மற்றொரு பெண்ணுடன் ‘லிவ்-இன் உறவில்’ இருப்பது குற்றமல்ல என்றும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் கடமையை சமூக அறநெறிகள் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அலகாபாத் ஐகோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணின் தாயார் அளித்த கடத்தல் புகாரை ரத்து செய்த கோர்ட், இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்கள் இணைந்து வாழ்வதை தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரை சேர்ந்த நேத்ராபால்–அனாமிகா ஜோடி, அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், “18 வயதுக்கு மேற்பட்ட நாங்கள் இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருகிறோம். அனாமிகாவின் தாய் எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடுக்கும் அவரிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அனாமிகாவின் தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நேத்ராபால் ஏற்கனவே திருமணமானவர்; அவர் வயது வந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம்” என்று வாதிட்டார் . நேத்ராபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வாழ்ந்து வருவதால் இது சட்டப்படி குற்றமாகாது” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஒரு மனிதனின் ஒழுக்கநெறிக்கும் சட்டத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் எந்தவொரு குற்றத்தையும் இழைத்ததாக தெரியவில்லை. 18 வயது நிரம்பிய பெண்ணுடன் அவர் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருகிறார். சம்மதத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, தம்பதி வசிக்கும் இல்லத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் நுழையவோ, மூன்றாம் நபர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கவோ கூடாது” என்று தெரிவித்தனர்.