எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்
1 min read
Nitish Kumar resigns from MLC post
30.3.2026
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியை நிதிஷ் குமார் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, 32 ஆண்டுகளாக கட்சியை தன்னுடைய கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் நிதிஷ் குமார் கட்டியமைத்து இருக்கிறார் என அக்கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா பாராட்டினார்.
பீகாரில் நீண்டகாலத்திற்கு முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் 10-வது முறையாக முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். எனினும், மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். அவருடைய மகனுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.