June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் மாவட்டத்தில் திருவிழாக்கல்அன்னதானம் வழங்க உரிமம் பெறுவது அவசியம்

1 min read

It is necessary to obtain a license to provide festival food in Virudhunagar district.

2.3.2026

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பங்குனிப் பொங்கல் திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் முன் அனுமதியையும் உரிமத்தையும் பெற வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர்சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள விரிவான அறிவுறுத்தல்கள் வருமாறு:

  • அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  • அன்னதானம் சமைப்பவர்கள் அல்லது கேட்டரிங் ஏஜென்சிகள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து முறையான பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி ஆணை வழங்க வேண்டும்.
  • இணையதளப் பதிவு தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் 116 மற்றும் 118-ல் இயங்கும் நியமன அலுவலர் அலுவலகத்தில், அன்னதானம் தொடங்குவதற்கு முன்னரே பின்வரும் விவரங்களுடன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்:

*ஒருங்கிணைப்பாளரின் முகவரி மற்றும் அலைபேசி எண்.

  • அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி.
  • சமையல் குழு அல்லது கேட்டரிங் குழுவின் விவரங்கள்.
  • பயன்படுத்தப்படும் குடிநீரின் ஆதாரம் (பாட்டில் குடிநீர் எனில் அதன் உற்பத்தியாளர் விவரம்).
  • கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனுமதி மற்றும் நீர் பகுப்பாய்வு அறிக்கை. (அரசு குடிநீர் விநியோகம் எனில் உறுதிமொழி மட்டும் போதுமானது).
  • சமையல் குழுவினருக்குத் தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச் சான்று.
  • தரமான மற்றும் லேபிள் விவரங்கள் கொண்ட மூலப் பொருட்களை, உரிமம் பெற்ற வணிகர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்வதற்கான சுய உறுதிமொழிச் சான்று.
  • உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவை எக்காரணம் கொண்டும் மீண்டும் பரிமாறக்கூடாது.
  • தயாரித்த ஒவ்வொரு உணவிலிருந்தும் தலா 250 கிராம் எடுத்து, சுத்தமான பாட்டிலில் அடைத்து 48 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் (Reference Sample) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • சமையலுக்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொதுச் சுகாதாரத் துறை ஆய்வகங்களில் பரிசோதனை செய்து அறிக்கை வைத்திருக்க வேண்டும். முன் அனுமதியின்றி தனியார் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தக்கூடாது.
  • ஈக்கள் மற்றும் தூசு மொய்க்காத, சுகாதாரமான சூழலில் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
  • உணவில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளைச் சேர்க்கக்கூடாது.
  • சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது.
  • பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பணியாளர்கள் அனைவரும் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும், கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்து பணியாற்றுவது அவசியம்.
  • காலாவதியான பிஸ்கட்கள், குளிர்பானங்கள் அல்லது கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்யக்கூடாது.
  • வளாகத்தைச் சுத்தம் செய்யும் நபர்களை உணவு பரிமாற அனுமதிக்கக்கூடாது.
  • செய்தித்தாள்கள் (Newsprint) மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

இந்த நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டுகிறனே்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *