இந்தியா நோக்கி வந்த ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் சீனாவுக்கு திரும்பியது
1 min read
Iranian crude oil tanker bound for India returns to China
4.4.2026
2019 க்கு முன்பு இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 11.5 சதவீதத்தை ஈரானிடமிருந்து பெற்று வந்தது.
அமெரிக்கத் தடைகள் காரணமாக 2019 மே மாதம் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் தடைபட்டு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படுகிறது. ஈரான் அனுமதியுடன் மத்திய கிழக்கில் உள்ள இந்தியாவின் ஏரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருகின்றன.
மேலும் அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தால் தடைபட்ட ரஷியாவுடனான வர்த்தகம், அமெரிக்காவின் 30 நாள் அனுமதியால் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே சர்வதேச அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை தடுக்க ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கவும் அமெரிக்கா அண்மையில் தடைகளை தளர்த்தியது.
அதன்படி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானின் 600,000 பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு Ping Shun என்ற கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தது.
இந்த கப்பல் கடந்த மூன்று நாட்களாகக் குஜராத்தின் வாதினார் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று (4 ஆம் தேதி) குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடையும் என்று கூறப்பட்டது.
வாதினாரில் ரஷ்யாவின் Rosneft ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்தக் கப்பல் அங்குதான் வர வேண்டியிருந்தது.
ஆனால், இலக்கை நெருங்கும் நேரத்தில் திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றி, சீனாவின் டோங்யிங் நோக்கிச் செல்வதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான Kpler தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தும் முறைகளில் ஏற்பட்ட சிக்கலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
விற்பனையாளர்கள் 30 முதல் 60 நாட்கள் கடன் காலத்தைக் குறைத்து, உடனடிப் பணத்தைக் கோருவதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் 2025ல் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே வணிக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமானால் மட்டுமே ஈரானிய எண்ணெயை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று இந்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் எண்ணெய் விலையைக் குறைக்க அமெரிக்கா அளித்த இந்தத் தளர்வு வரும் ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.