நர்மதை ஆற்றுக்கு 11 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம்
1 min read
11 thousand liters of milk anointing for the Narmada River
10.3.2026
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றில் சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பாதலேஷ்வர் மகாதேவ் கோயிலில் கடந்த 21 நாட்களாக நடைபெற்ற மகா யாகம் மற்றும் ஆன்மீகச் சடங்குகளின் ஒரு பகுதியாக, நர்மதை நதிக்கு இந்த பால் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா தொடர்பான பேனர்கள் மற்றும் உள்ளூர் தகவல்களின்படி, இந்த விழா மார்ச் 18 முதல் ஏப்ரல் 7 வரை மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் 41 டன் நெய் பயன்படுத்தப்பட்டு பிரம்மாண்டமான ‘மகா யாகமும் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த மகாயாகத்தில் தங்கம், வெள்ளி மற்றும் மருத்துவ மூலிகைகள் உட்பட மொத்தம் 41 டன் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நர்மதை நதியைத் தூய்மைப்படுத்தவும், நர்மதா பரிக்ரமா (நதிப் பயணம்) மேற்கொள்ளும் பக்தர்களின் நலத்திற்காகவும், உலக அமைதிக்காகவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காரணம் ஆற்று நீரில் அதிகப்படியான பால் சேரும்போது அது பாக்டீரியா வளர்ச்சியைத் தூண்டி, நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கும். இது மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடியும். கடவுள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூறுகிறாரா என்ன?
மறுபுறம் இத்தனை லிட்டர் பாலை தண்ணீரில் ஊற்றி வீணாக்குவதற்கு பதில் ஊட்டச்சத்து குறைபாடுடன், மேலும் உணவின்றி எத்தனையோ மக்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து உதவி, அவர்களின் பசியை போக்குவதில் இவர்களின் கடவுளை பார்த்திருக்கலாம் அல்லவா? என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மத்தியப் பிரதேசத்திலேயே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவில், ‘போஷன் ட்ராக்கர்’ மற்றும் சுகாதார ஆய்வுகளின் தரவுகளைச் சுட்டிக்காட்டி, அந்த மாநிலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 1.36 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, அந்த மாநிலத்தில் 57 சதவீத பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தாலும் ஏற்பாட்டாளர்களும், பக்தர்களும் இந்தச் செயலை ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என்று நியாயப்படுத்துகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி முழுவதற்கும் தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்பட்டதாகவும், மத நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.