கடையம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் ராஜினாமா- வேட்பாளருக்கு எதிர்ப்பு
1 min read
DMK North Union Secretary Mahesh Mayavan resigns – Opposition to the candidate
10.4.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.எச்.பால் மனோஜ் பாண்டியனுக்கு எதிராக கடையம் திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜினாமா செய்தார். தேர்தல் அலுவலகத்தி்ல புகுந்து கிளைச் செயலாளர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம் திமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் திமுக நிர்வாகிகளை அனுசரித்துப் போகாததால், நிர்வாகிகளின் மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிமுகவில் இருந்து வந்தவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதால் நிர்வாகிகள் கொதிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், சுயமரியாதையை இழந்து கழகப் பணியாற்ற நான் விரும்பவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், பிரசார வாகனத்தில் ஏறிய தன்னை ஒன்றிய செயலாளர் என்றும் பாராமல் கீழே இறக்கி விட்டதாகவும் கூறியுள்ள அவர், திமுகவில் 21 வருடத்திற்கு மேல் பணியாற்றியுள்ளேன். தற்போது கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறேன். தற்போது ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக அதிமுகவிலிருந்து கட்சி மாறி வந்த மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார், அவர் அதிமுகவிலிருந்து வந்த நிர்வாகிகளை வைத்துக்கொண்டு இங்கு அரசியல் செய்கிறார்.
இதனால் உண்மையான திமுக தொண்டர்களுக்கு மதிப்பில்லை என்று தெரிவித்து இருக்கிறார். தற்போது திமுகவில் வேட்பாளராக இருக்கும் மனோஜ் பாண்டியன் சுயமரியாதை பற்றி பேச தகுதி அற்றவர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் லட்டர் பேர்டில் எழுதியுள்ளார்.
தேர்தல் அலுவலகத்தில் ரகளை:
இதனிடையே, ஆலங்குளம் திமுக தேர்தல் மருதப்புரத்தைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகி மாரித்துரை என்பவர் வேட்பாளர் மேலுள்ள அதிருப்தியில் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து உடைத்தார். மேலும் மனோஜ் பாண்டியன் இந்தத் தேர்தலில் தோற்றுப் போவார் எனவும் கூறிக் கொண்டே சென்றார். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி சுமூகமான நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் என திமுக கூட்டணி கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.