மேற்கு வங்காளத்தில் அகதிகளுக்கு குடியுரிமை- மோடி வாக்குறுதி
1 min read
Citizenship for refugees in West Bengal – Modi promises
11.4.2026
மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாகப் பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள கத்வா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
நாட்டின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. வங்காளத்தில் பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்த பாஜக உறுதியாக உள்ளது.
“பாஜக எடுத்துள்ள இந்த உறுதிமொழி வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல. இது திரிணாமுல் காங்கிரசின் ‘காட்டு ராஜ்ஜியம்’ மற்றும் ‘சிண்டிகேட் ராஜ்ஜியத்திற்கு’ முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறைகூவல்.
வங்காளத்தின் மகள்கள் இனி பாதுகாப்பாக இருப்பார்கள்… வங்காளத்தில் ஊழல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்: மே 4ஆம் தேதிக்குப் பிறகு, அவர்கள் தப்பி ஓடுவதை நீங்கள் காண்பீர்கள்.
அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகவே பாஜக குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் அகதிகள் மத்தியில் அச்சத்தைப் பரப்ப முயற்சி செய்து வருகின்றனர்.
நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாப்பின் கீழ் மத்துவா மற்றும் நாமசூத்திர அகதிகள் குடும்பங்கள் இருப்பதாகவும், அகதிகளுக்குக் குடியுரிமை கிடைப்பதற்காகவே குடியுரிமை சட்டத்தை இயற்றினோம்.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிஏஏ-வின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.