கன்னியாகுமரியில் விஜய் நாளை பிரசாரம்
1 min read
Vijay to campaign in Kanyakumari tomorrow
11.4.2026
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறார்
மகாதானபுரம் ரவுண்டானாவில் அவருக்கு தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான மாதவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கன்னியாகுமரி ‘ஜீரோ பாயிண்ட்’ பகுதிக்கு செல்லும் அவர், பழத்தோட்டம் வழியாக தனது பிரசாரப் பயணத்தைத் தொடர்கிறார்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் மேடை அலங்காரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. .
விஜய்யின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுக்கூட்டம் நடைபெறும் விவேகானந்தா கல்லூரி மைதானத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து ஜீரோ பாயிண்ட் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.முன்னதாக விஜய் ரோடு ஷோ மட்டும் செல்வார் எனவும் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியான நிலையில், விஜய் திட்டமிட்டபடி பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.