தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் தொகுதி குறையாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
Constituency redelineation will not reduce the number of seats in Tamil Nadu – Edappadi Palaniswami
17.4.2026
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த 90 நாட்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும்.
அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி. சட்டம் ஒழுங்கை அதிமுக நிலைநாட்டும். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொகுதி மறுவரையறை குறித்து திமுக தவறான கருத்தை பரப்புகிறது. தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது; தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் அணிந்த கருப்பு சட்டைக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. மு.க.ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த பிறகும், சேலம் மாவட்டத்தில் 11-ல் 10 தொகுதிகளை வென்றோம்.
சட்டமன்ற தேர்தலுக்கு டெல்லியை ஏன் திமுக இழுக்கிறது? இது தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் இல்லை. திமுகவினருக்கு இதுதான் கடைசி தேர்தல். பெரும்பாலான இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். நாம் வெல்லாவிட்டால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.